ஒரு மணப்பெண்ணைத் தேடும்
இன்றைய நாட்களில்தான் புரிகிறது
உன் போன்ற ஒரு மணப் பெண்ணின் அருமை..
எப்படி யோசித்தாலும் உன்னில்தான்
அது வந்து முடிகிறது.
இறந்த காலத்து நினைவுகள்
பொக்கிஷம் என்கிறேன்
நீ குப்பையில் போடு என்கிறாய்
நினைவுகளைக் கொண்டாடுவதால்
அதன் உன்மையான சுவை
கிடைக்கப் போவதில்லை.
இணைய முடியாத காதலுக்கு நீ
என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்துக் கொள்
அதற்கு எந்தத் தாஜ்மஹாலும் தேவையில்லை..
துணிச்சல் இல்லாதவன்
எதற்குக் காதலிக்க வேண்டும்.
அவன் நினைவுகளை வைத்துக் கொண்டு
பட்டாம்பூச்சி செய்கிறான்.
நினைவுகளால் வாழ்தலின் இன்பத்தை
ஒரு போதும் தர முடியாது.
உன் எல்லாக் கனவுகளின் போதும்
நான் இமைகளைப் பிடுங்கியதான வலி
ஒவ்வொரு தனிமையிலும் உன்னைக் கொல்கிறது.
தோற்றுப் போவதற்காகவே
நீ காத்திருந்தாய்...
ஒரு கோழைத் தனமும் இயலாமையுமே
உன்னைத் தோல்வியடையச் செய்ததாக
நீ வருந்துகிறாய்.
எனக்குள் இருந்த ஆண் என்றவன்
தோற்றுப் போனது அன்றுதான்.
நினைவுகளை வைத்துக் கொண்டு
வாழலாம் என்கிறேன் நான்.
தோற்றுப் போன நினைவுகளுக்கு
வாழ வைக்கும் சக்தி இல்லையென்கிறாய்.
கண்ணீர் கொடுத்த போதும்
உன்னால் சிரிக்க முடிகிறது.
இறந்த காலம் என்பது
எத்தனை அழகானது என்கிறேன்
இறந்தவைகள் ஒரு போதும்
அழகில்லை என்கிறாய்.
இப்போது
உன் நினைவுகள் போன அதே வழிகளில்
நான் அமர்ந்திருக்கிறேன்.
இத்தனை வருடமாகியும்
உன் நினைவு எனக்குள் வற்றாமல்தான் இருக்கிறது.