Monday, November 5, 2012

நீயற்ற பொழுது


 
தனிமை
தன் கோப்பையில்
உன்னையே
திரும்பத் திரும்ப
ஊற்றிக் கொள்கிறது.


எங்கு தேடியும்
கிடைப்பதில்லை
உன் போன்ற ஒரு
மணப் பெண்

வாழ்க்கையை உன்னிடம்

பகிர்ந்த அளவுக்கு
யாருடனும்
பகிர முடியவில்லை


எல்லா மகிழ்ச்சியிலும்
துக்கத்திலும்
உனக்கு ஒரு
அழைப்புத் தர வேண்டும்
போலிருக்கிறது.


நீ இல்லாத உலகில்
எல்லாக் கதிரைகளும்
வெற்றிடமாகவே
இருக்கின்றது.


என் ரயில் பயண
பக்கத்து இருக்கையில்
இறுதிவரை
நீ அமரவேயில்லை.


















நாம் நடந்த தெருக்களில்
நினைவுகள்
மிதிபடுகின்றன.


நீ தந்த நட்பு
ஆத்ம நண்பனிடத்திலும்
கிடைப்பதில்லை.


எனக்காகவே
இருந்தவளை
எவனுக்கோ
கொடுத்து விட்டேன்


மறப்பதென்பது
இத்தனை கடினமென்று
நான் நினைத்திருக்கவில்லை


ஒரு குளிர்கால முத்தம்
நீ இல்லாமல்
வீணாகிப் போகிறது.

 

 
 

Thursday, September 6, 2012

நினைவுகளைப் பின்தள்ளி...














ஒரு மணப்பெண்ணைத் தேடும்
இன்றைய நாட்களில்தான் புரிகிறது
உன் போன்ற ஒரு மணப் பெண்ணின் அருமை..


எப்படி யோசித்தாலும் உன்னில்தான்
அது வந்து முடிகிறது.


இறந்த காலத்து நினைவுகள்
பொக்கிஷம் என்கிறேன்
நீ குப்பையில் போடு என்கிறாய்


நினைவுகளைக் கொண்டாடுவதால்
அதன் உன்மையான சுவை
கிடைக்கப் போவதில்லை.


இணைய முடியாத காதலுக்கு நீ
என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்துக் கொள்
அதற்கு எந்தத் தாஜ்மஹாலும் தேவையில்லை..


















துணிச்சல் இல்லாதவன்
எதற்குக் காதலிக்க வேண்டும்.
அவன் நினைவுகளை வைத்துக் கொண்டு
பட்டாம்பூச்சி செய்கிறான்.


நினைவுகளால் வாழ்தலின் இன்பத்தை
ஒரு போதும் தர முடியாது.


உன் எல்லாக் கனவுகளின் போதும்
நான் இமைகளைப் பிடுங்கியதான வலி
ஒவ்வொரு தனிமையிலும் உன்னைக் கொல்கிறது.


தோற்றுப் போவதற்காகவே
நீ காத்திருந்தாய்...

















ஒரு கோழைத் தனமும் இயலாமையுமே
உன்னைத் தோல்வியடையச் செய்ததாக
நீ வருந்துகிறாய்.


எனக்குள் இருந்த ஆண் என்றவன்
தோற்றுப் போனது அன்றுதான்.


நினைவுகளை வைத்துக் கொண்டு
வாழலாம் என்கிறேன் நான்.
தோற்றுப் போன நினைவுகளுக்கு
வாழ வைக்கும் சக்தி இல்லையென்கிறாய்.





















கண்ணீர் கொடுத்த போதும்
உன்னால் சிரிக்க முடிகிறது.


இறந்த காலம் என்பது
எத்தனை அழகானது என்கிறேன்
இறந்தவைகள் ஒரு போதும்
அழகில்லை என்கிறாய்.


இப்போது
உன் நினைவுகள் போன அதே வழிகளில்
நான் அமர்ந்திருக்கிறேன்.
இத்தனை வருடமாகியும்
உன் நினைவு எனக்குள் வற்றாமல்தான் இருக்கிறது.








Sunday, March 4, 2012



ஓவ்வொரு அந்தியின்
அடர்த்தியையும்
நீ இல்லாமலேயே
ரசிக்கவேண்டியிருக்கிறது


ஜன்னலோரத்தில்
அமர்ந்தால்
மரமெல்லாம்
நீயாகத்தான் தெரிகிறாய்


ஆறுதல்
உன் குரல்தான்
இப்போது அதுவும்
கேட்பதில்லை


என் ஜன்னலைத் திறந்தால்
தெரிவது நீதான்


உன் மௌனத்தை
எப்படி போட்டோ
பிடிப்பது


நீ புல்லாங்குழலா
மூங்கிலா?


நான் முட்களையும்
ரோஜாக்களையும்
கொண்டு வந்தால்
நீ முட்களையே
தெரிவு செய்கிறாய்


குழந்தைகளுக்கு
பொம்மை மாதிர்
நீ எனக்கு


நேற்றைய இரவு
நீ சிரித்தது
போல இருந்தது


உன் நினைவுகளால்
வலை பின்னி
நானே சிக்கிக் கொள்கிறேன்


செல்போன் திரையில்
உன் பெயர் மட்டுமே
விழுகிறது


உன்னைப் பிரிய
மனசு விட்டாலும்
நீ விடுவதில்லை


நீ ஆசைகளை
வைத்துக் கொண்டு
காத்திருக்கிறாய்
நான்
கனவுகளை ஏந்திக் கொண்டு
பயணிக்கிறேன்..


என்னோடு பேசாமல்
உன்னால் இருக்க முடியாது
உன்னோடு பேசினால்
எனக்கு இருக்க முடியாது


எங்கோ போன நீ
இடறி எனக்குள்
விழுந்தாய்


இன்றொரு இசை
கேட்டேன்
அது உன்னைப் போல்
இருந்தது